Blue Flower

மனித இனம் தோன்றிய காலந்தொட்டே மனிதனுக்கும் ஆயுதங்களுக்குமான உறவு தொடங்கி விட்டது. வில், வாள், துப்பாக்கி, பீரங்கி, ஏவுகணை என இந்த பரிணாம வளர்ச்சியில் இன்றைக்கு உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஆயுதம் ‘அணுகுண்டு’. பொருளாதாரத்தை விட அணு ஆயுத பலம் கொண்டிருக்கும் நாடுகளே இன்றைக்கு வலிமையான நாடுகளாக கருதப்படுகின்றன.

ஆனால், இந்த அதிபயங்கரமான அணுகுண்டை விடவும் கொடிய ஆயுதம் ஒன்றுண்டு. அவை ‘விதைகள்’. போரின் நோக்கம் உயிர்களை அழிப்பதல்ல... ஒரு நாட்டின் மக்கள் மற்றும் வளங்களை தன் வசப்படுத்திக் கொள்வதுதான். ஒரு நாட்டின் பாரம்பரிய விதைகளை அழித்து பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளைப் பரப்புவதன் மூலம், விவசாயிகள் தங்களது தற்சார்பை இழந்து, விதை நிறுவனங்களைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை ஏற்படும்.

அச்சூழல் உருவாகினால், ஒரு நாட்டின் உணவு உற்பத்தியையே தீர்மானிக்கும் சக்தியாக விதை நிறுவனங்கள் உருமாறிவிடும். ஆகவேதான் விவசாய, பொருளியல் அறிஞர்கள் இதனை ‘உயிரியல் போர்’ என்று குறிப்பிடுகின்றனர். விதைகளே இப்போரின் ஆயுதங்களாக இருக்கின்றன.

வியாபார அரசியல்... விபரீத விளைச்சல்...

1997ம் ஆண்டு வெளியான ‘உயிரியல் புரட்சியின் ஒடுக்குமுறைகள்’ எனும் நூலின் மூலம் விவசாயத்தின் மீது நிகழ்த்தப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் அரசியல் குறித்துக் கூறிய எழுத்தாளர் பாமயனிடம் இது பற்றிப் பேசினோம்...‘‘பன்னாட்டு நிறுவனங்களைப் பொறுத்த வரை எந்த நாடும் அவர்
களுக்குச் சொந்த நாடு கிடையாது.

எல்லா நாடுமே அவர்களுக்குச் சொந்தம். எங்கும் சுரண்டுவார்கள், எங்கும் கடை விரிப்பார்கள். பணப் பொருளாதாரத்தை முற்றிலுமாக ஓரிடத்தில் குவிப்பது மட்டுமே அவர்களுடைய நோக்கம். ஒரு நாட்டின் இறையாண்மை வேளாண்மையில் இருக்கிறது. வேளாண்மையின் இறையாண்மை விதைகளில் இருக்கிறது.

பல நூறு ஆண்டுகளாக விவசாயிகள் பாதுகாத்து வந்த விதைகள், பசுமைப்புரட்சியின்போது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குச் சென்றது. பாரம்பரிய ரகங்களை மறுத்து ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட விதைகளைக் கொண்டு விவசாயம் புரிய விவசாயிகள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அந்த விதைகள் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் தயவில்தான் வளரும். விதைகளை உருவாக்க பண உதவி புரிந்த நிறுவனங்கள்தான் உரம் மற்றும் பூச்சிக்கொல்லியைத் தயாரித்தன. இதிலிருந்தே பசுமைப்புரட்சிக்குப் பின்னர் இருக்கும் லாப நோக்கிலான வியாபார அரசியலைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா மிகப்பெரிய விதைச்சந்தையைக் கொண்டிருக்கிறது. இதனால் பன்னாட்டு விதை நிறுவனங்களின் மிக முக்கியமான இலக்காக இந்தியா இருந்து வருகிறது. பூச்சித்தாக்குதலை சமாளிக்க முடியாமல் பூச்சிக்கொல்லிக்காகவே அதிகம் செலவு செய்து நொந்து போனவர்கள் பருத்தி விவசாயிகள். அப்படியான சூழலில், ‘பூச்சிக்கொல்லியே தேவையில்லை’ எனக்கூறி, பூச்சியை எதிர்க்கும் திறன் கொண்ட விதைகள் என மரபீனி மாற்ற பி.டி. பருத்தி விதைகளைக் கொண்டு வந்தன.

அடுத்ததாக பி.டி. கத்தரிக்காய் கொண்டு வருவதற்கென மேற்கொள்ளப்பட்ட முயற்சி மக்கள் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது. மரபீனி மாற்ற பருத்தி விதையைக் கொண்டு வந்ததன் மூலம் விதை நிறுவனங்கள் பல்லாயிரம் கோடிகளை அள்ளிக்கொண்டன. தொடக்கத்தில் 10 சதவிகிதம் மட்டுமே மரபீனி மாற்ற பருத்தி பயிரிடப்பட்டது.

கடந்த பத்தாண்டுகளிலோ அதன் பயன்பாடு 90 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. மரபீனி மாற்ற பருத்தி விதைகளை விளைவிக்கத் தொடங்கியவர்கள் பாரம்பரிய நாட்டு ரக பருத்தி விதைகளை சேமிக்கத் தவறி விட்டனர். ஆகவே, இன்றைக்கு இந்திய பருத்தி விவசாயத்தின் குடுமி மன்சாண்டோ எனும் விதை நிறுவனத்தின் கையில் இருக்கிறது.

பருத்திக்கு ஏற்பட்ட இதே நிலைமை முக்கியமான உணவுப் பயிர்களுக்கும் ஏற்பட்டால் என்ன ஆகும்? வேளாண் உற்பத்தியே மன்சாண்டோ, சிஞ்செண்டா, டூபாண்ட் போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களைச் சார்ந்து மேற்கொள்ளப்படும்போது, நாட்டின் இறையாண்மை என்னவாகும்? அப்படியானதொரு நிலைக்குக் கொண்டு வருவதற்கான வேலை சத்தமே இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

இனியும் நாம் விழிப்படையவில்லை என்றால், விதை நிறுவனங்களின் வசம் நமது விவசாயம் அகப்பட்டுக்கொள்ளும். இந்தியாவில் என்ன பயிரிட வேண்டும் என்பதை அந்நிறுவனங்களே தீர்மானிக்கும் கதிக்கு ஆளாக வேண்டி வரும். அந்நிறுவனங்கள் விதை விற்பனையை நிறுத்தி உணவுத்தட்டுப்பாட்டை ஏற்படுத்த இயலும். இதன் மூலம் ஆயுதப்போர் நிகழ்த்தாமலேயே ஒரு நாட்டைக் கைப்பற்ற முடியும்.

அரசின் விவசாயக் கொள்கைகள் இந்திய இறையாண்மையைக் காப்பாற்றுவதாக இல்லை. அரசியல் மாற்றம் கோருவது முக்கியமானது என்றாலும், மக்களாகிய நாம் தெளிவடைந்து முன்னெடுக்க வேண்டிய பணிகள் இருக்கின்றன. விவசாயிகளே ஒன்றிணைந்து விதை வங்கிகளை உருவாக்க வேண்டும். விதைத்திருவிழாக்கள் மூலம் விதைகள் குறித்த விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்த வேண்டும்.

குல தெய்வ வழிபாடு போல ஒவ்வொருவரும் குறிப்பிட்ட விதைகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொடுத்து செல்ல வேண்டும். விதைகளை காப்பாற்றும்/மீட்டெடுக்கும் பணிகளை பல தன்னார்வ அமைப்புகளும் மனிதர்களும் மேற்கொண்டு வருகிறார்கள். இது போன்ற ஆரோக்கியமான செயல்பாடுகளும், விதைகள் குறித்த விழிப்புணர்வுமே இன்றைய தேவையாக இருக்கிறது’’ என்கிறார் பாமயன்.

இயற்கைக்கு எதிரானது... எல்லோருக்கும் புதிரானது...

மரபீனி மாற்று விதைகளின் ஆதிக்கம் மேலோங்கினால் நமது விவசாயம் எத்தகைய சீரழிவுக்கு ஆளாகும்? விளக்குகிறார் இயற்கை வேளாண் செயற்பாட்டாளர் இளங்கோ கல்லாணை...‘‘உலகில் வாழும் ஒவ்வொரு உயிரும் வாழ்தலுக்கான தகவுகளைக் கொண்டிருக்கும். வறட்சி, வெள்ளம் போன்ற பேரிடர்களைத் தாங்கி வளரக்கூடிய தகவு பாரம்பரிய விதைகளுக்கு இருக்கிறது.

உயிரியல் தொழில்நுட்பம் என்றைக்கு விவசாயத்துக்குள் நுழைந்ததோ, அன்றிலிருந்தே அதன் அழிவு தொடங்கி விட்டது. அந்தந்த பகுதியின் தட்பவெப்ப நிலைக்குத் தகுந்தாற்போன்ற பயிர்களும் பல ரகங்களும் இயற்கையாகவே இருக்கின்றன. அதனை மறுத்து குறிப்பிட்ட விதை ரகங்களுக்குள் விவசாயத்தைச் சுருக்கியதுதான் பிரச்னையே.

உலகம் முழுவதும் மரபீனி மாற்று விதைகளைத் திணிக்கும் பணியை பன்னாட்டு விதை நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. பில்கேட்ஸ் கூட மான்சாண்டோ நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார். உலக அரசியலையே தீர்மானிக்கும் சக்திகளாக விதை நிறுவனங்கள் இன்றைக்கு வளர்ந்து
நிற்கின்றன. விவசாயத்தை லாபம் தரும் தொழிலாக மட்டுமே கொண்டு செல்வதுதான் இவர்களின் நோக்கம். மரபீனி மாற்று விதைகளைப் பயிர் செய்யும் நிலையில் நடவு தொடங்கி அறுவடை வரையிலும் அந்நிறுவனங்கள் சொல்வதைத்தான் பின்பற்ற வேண்டி வரும்.

காலங்காலமாக நம் முன்னோர் நமக்கென விட்டுச்சென்ற விவசாய முறைகள் அத்தனையும் பயனற்றுப் போகும். எல்லா உற்பத்திகளையும் போல் விவசாய உற்பத்தியையும் தொழிற்சாலைமயமாக்கும் பணியைத்தான் இவர்கள் மேற்கொள்கிறார்கள். 50 கிராமில் சோப்பு தயாரித்து விற்பதைப்போல வகுத்து வைக்கப்பட்ட அளவு/காலத்துக்குள் விளைபொருட்களையும் உற்பத்தி செய்வார்கள். அதற்கு உயிரித்தொழில்நுட்பம் துணை புரியும்.

அந்தந்தப் பகுதிகளுக்கான பயிர் உற்பத்தி என்பதை மறுத்து பரவலாக ஒரே ரகப் பயிர்களை மட்டும் விளைவிக்கும் ஒருமைக்
கலாசாரம் பின்பற்றப்படும். விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லாத அரசியல்/சந்தை சூழலை உருவாக்கி விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேற்றுவார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களின் வசம் விவசாய நிலங்கள் வந்த பிறகு, இயந்திரங்களைக் கொண்டே விவசாயம் புரிவார்கள். உதாரணத்துக்கு பஞ்சாப் மாநிலத்தில் பெப்சி நிறுவனம் மேற்கொள்ளும் ஆரஞ்சு உற்பத்தியைக் கூற முடியும். மரபீனி மாற்ற ஆரஞ்சு மரங்களில் ஒரே நேரத்தில், ஒரே அளவில் பூ பூத்து காய் காய்க்கும். இயந்திரமயப்படுத்துவதற்கான ஒழுங்கான கட்டமைப்பை மரபீனி மாற்றம் மூலம் கொண்டு வந்துள்ளதன் விளைவுதான் இது.

மரபீனி மாற்ற விதைகள் என்பது முற்றிலும் இயற்கைக்கும் நமது நாட்டின் இறையாண்மைக்கும் எதிரானது. பாரம்பரிய விவசாயத்தினால்தான் விவசாய உற்பத்தி குறைந்துள்ளது என்று தவறான பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உண்மையில் விவசாய உற்பத்திக் குறைவுக்கு நகர்மயமாதல்தான் காரணம். போலியான பரப்புரைகளை புறந்தள்ளி விட்டு நமது பாரம்பரிய இயற்கை விவசாயத்தை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே நமது எதிர்கால சந்ததியை வளமானதாக உருவாக்க முடியும்

#Organic
#Seed
#Weapon